Friday, 26 August 2016

"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 13"

1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்  பற்றிய தொகுப்பு.- தொடர்ச்சி.

இன்று நாம் காணவிருக்கும் படங்கள்:

1. நல்லதம்பி: கிருஷ்ணன் பஞ்சு இயக்கி, சி ஆர் சுப்பராமன் இசையமைத்த இப்படத்தில் என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம், பி பானுமதி, எஸ் வி சகஸ்ரநாமம், காக்கா ராதாக்ருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

அமெரிக்க திரைக் கவியின் காவியமான "Mr. Deeds Goes To Town" என்ற படத்தைப் பார்த்த திரு எஸ் வி சகஸ்ரநாமம், என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் சிந்தனைகளை இது மக்களிடையே எடுத்துச் செல்லும் என்று எண்ணினார். திரு அண்ணாதுரையை இப்படத்தை காணுமாறு அழைத்தார். பின்னர் அண்ணாதுரை இதன் மூலக்கதையை உருவாக்கினார்.

மறைந்த ஜமீன்தாரின் தூரத்து உறவினரான என் எஸ் கிருஷ்ணன் அவரது வாரிசாக நியமிக்கப்படுகிறார். ஜமீன்தாரின் மகளான பி பானுமதி அவர்மீது காதல் வயப்படுகிறார். இருவரும் விரைவில் மணக்கவிருக்கிறார்கள். ஆனால் எஸ்டேட் மேனேஜரான எஸ் வி சகஸ்ரநாமத்திற்கு பானுமதி மேலும் எஸ்டேட் சொத்துகளின் மேலும் ஒரு கண் உள்ளது.

என் எஸ் கிருஷ்ணன் மூலக் கதையில் சிறிது மாற்றங்கள் செய்து, டி ஏ மதுரத்தை தனது நாயகியாகக் கொணர்ந்தார். பானுமதியுடன் முதலில் படமாக்கப்பட்ட ஒரு காதல் காட்சி கனவுப் பாடலாக மாற்றப் பட்டது. இப்பாடலில் என் எஸ் கேவுக்கு கண்டசாலா பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.

என் எஸ் கிருஷ்ணன், இந்தப் படத்தை தனது அரசியல் கொள்கைகளையும், சமுதாய சிந்தனைகளையும் பரப்புவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்.  இப்படம் விமரிசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் வசூலில் அவ்வளவாக சாதிக்கவில்லை. ஆனாலும் இப்படத்தில் வரும் மதுவின் தீமைகளைப் பற்றிய பாடல்களும்,  சமுதாய சிந்தனை பற்றிய பாடலும் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றன. தீண்டாமையைப் பற்றிய என் எஸ் கிருஷ்ணநின் "கிந்தனார்" காலக்ஷேபம் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டுவதாக அமைந்திருந்தது.

2. வாழ்க்கை: இந்தப் படம். AVM ஸ்டுடியோஸ் மெட்ராஸின் முதல் தயாரிப்பாகும். ப நீலகண்டனின் கதையை தனது மெட்ராஸ் ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பாக தயாரிக்க விரும்பினார் திரு ஏ வி மெய்யப்பன் அவர்கள். இதன் கதை Bachelor Mother (1939), மற்றும் குன்வாரா (1942) என்ற ஹிந்திப் படத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டது. இதில் டி ஆர் ராமச்சந்திரன், வைஜயந்திமாலா, எம் எஸ் திரௌபதி, கே சாரங்கபாணி, எஸ் வி சகஸ்ரநாமம், பி டி சம்பந்தம் ஆகியோர் நடித்திருந்தனர்.

கதாநாயகன், தனது காரில் ஒரு கைக்குழந்தையைக் கண்டெடுக்கிறார். கதாநாயகியும், அவளது தாயாரும் இவரைத் தவறாக எண்ணுகிறார்கள். முடிவில் "ALL IS WELL THAT ENDS WELL"  என்ற கூற்றுப்படி எல்லாம் சுபமாக முடிகின்றது.

இதில் கதாநாயகனாக நடிக்க, அப்போது ஒப்பந்தத்தில் இருந்த டி ஆர் ராமச்சந்திரன் தேர்வு செய்யப் பட்டார். மெய்யப்பன் அவர்களின் தேர்வு மிகவும் சரியாக இருந்தது. டி ஆர் ராமச்சந்தினின் நடிப்பு படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. கதாநாயகி சரியாக அமையவில்லை. நாயகியாக நடிக்க பணக்காரக் களையுடன் கூடிய ஒரு கல்லூரிப் பெண்ணின் முகம் தேவைப்பட்டது. மெய்யப்பன் அவர்களின் இணை இயக்குனர் திரு எம் வி ராமன், அப்போதுதான் தனது நடன அரங்கேற்றம் முடித்திருந்த ஒரு இளம்பெண்ணை சிபாரிசு செய்தார். அவரது ஆற்றல், அழகு, கவர்ச்சி இவற்றைக் கண்ட அவரையே நாயகியாக ஒப்பந்தம் செய்ததுடன் மூன்றாண்டு காலத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தார். தமிழ்த்திரையுலகில் ஒரு புதிய தாரகை உதயம். அவர்தான் பின்னாளில் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தித் திரைப்படங்களிலும் வெற்றிக் கொடி  நாட்டிய திருமதி வைஜயந்திமாலா. அவருக்கு இந்தப் படத்தில் மூன்று நாட்டியப் பாடல்கள் அமைந்தன. ஒன்று சுப்ரமணிய பாரதியாரின் "பாரத சமுதாயம் வாழ்கவே", திருமதி டி கே பட்டம்மாள் அவர்கள் பாடியது, மற்ற இரண்டும் இன்னொரு புகழ்பெற்ற கர்நாடக இசைப்  பாடகியான எம் எல் வசந்தகுமாரி அவர்கள் பாடியது. அப்போது புகழ் பெற்றிருந்த லலிதா பத்மினி ராகினி சகோதரிகளின் நாட்டியம் ஒன்றும் இப்படத்தில் இடம் பெற்றது.

இருந்தாலும் இப்படத்தில் மற்றொரு பாடலே மிகுந்த பெயர் பெற்றது. இப்படபிபிடிப்பு நடைபெற்ற சமயத்தில் மெய்யப்ப செட்டியாரும் அவரது குழுவினரும் கிட்கி என்றொரு ஹிந்திப் படத்தைப் பார்த்தனர். அதில் ஒரு பாடலின் மெட்டு அவர்களை மிகவும் கவர்ந்தது. அதன் இசை சி ராமச்சந்திரா. திரையரங்கை விட்டு வெளியே வந்தபோது, திருமதி எம் எஸ் ராஜேஸ்வரி அப்பாடலின் மெட்டை ஹம் செய்தவாறிருந்தார். இதைக் கண்ட மெய்யப்ப செட்டியார். தனது ஆஸ்தான இசையமைப்பாளர் திரு ஆர் சுதர்சனை அந்த மெட்டில் ஒரு பாட்டு இசையமைக்குமாறு கேட்டுக் கொண்டார். திரு காமாக்ஷிசுந்தரம் பாடல் இயற்ற அந்தப் பாடலை டி ஆர் ராமச்சந்திரனும், எம் எஸ் ராஜேஸ்வரியும் பாடினார்கள். அப்பாடல்தான் "உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்" என்ற பாடல். இப்பாடல் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது.

3. வேலைக்காரி: என் எஸ் கிருஷ்ணன் சிறையிலிருந்த சமயம் அவரது குழுவில் இருந்த கே ஆர் ராமசாமிக்கும், எஸ் வி சகஸ்ரநாமத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், கே ஆர் ராமசாமி தனியாகப் பிரிந்து தனது சொந்த நாடகக் குழுவைத் துவக்கினார். அதற்கு, திரு சி என் அண்ணாதுரை அவர்கள் எழுதித் தந்த கதைதான் "வேலைக்காரி". திரு ஜூபிடர் சோமு அவர்கள் இதன் திரைப்பட உரிமையைப் பெற்று இதைப் படமாக எடுக்கத் துவங்கினார். திரு ஏ எஸ் சாமி அவர்கள் இயக்குனராக நியமிக்கப்பட்டார். கே ஆர் ராமசாமி கதாநாயகனாகவும், திருமதி எம் வி ராஜம்மா, வி என் ஜானகி அவர்கள் இருவரும் இரு கதாநாயகிகளாகவும் நடித்தனர். இருந்தும் அனைவரையும் தனது நடிப்பாற்றளாலும், வசன உச்சரிப்பாலும் கவர்ந்தவர், நாயகனின் தோழனாக ஊதாரி வேடத்தில் வந்த திரு டி எஸ் பாலையா அவர்கள்தான்.

இதில் வந்த சில நாத்திக வசனங்களும் காட்சிகளும் ஆத்திக அன்பர்களியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அவர்கள் இப்படத்தை  தடை செய்ய கோரிக்கை விடுத்தார்கள். ஆனாலும் எல்லாவற்றையும் மீறி இப்படம் பெருத்த வரேவேற்பை பெற்றது. இதன் இசை திருவாளர்கள், எஸ் எம் சுப்பைய்யா நாயுடு, சி ஆர் சுப்பராமன் அவர்கள் இருவரும்."ஓரிடம்தனிலே, நிலையில்லா உலகினிலே" "ஆட வருவாயா கண்ணா" வாழிய நீடூழி பகுத்தறிவாளர்" "இன்னமும் பாராமுகம் ஏனம்மா" போன்ற பாடல்கள் ரசிகர்கள் மனத்தை கவர்ந்தன.

இத்திரைப்படை, தமிழ்த்திரைப்படத்துரையிலும், தமிழக அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு திரைப்படமாகும்.

புகைப்படங்கள்: 1. நல்லதம்பி. 2. வாழ்க்கை. 3. வேலைக்காரி.
"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 12"

1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்:

அபூர்வ சகோதரர்கள், இன்பவல்லி, கனகாங்கி, கன்னியின் காதலி, கீதா காந்தி, தேவ மனோகரி, நம் நாடு, நல்ல தம்பி, நவஜீவன், கிருஷ்ணன் பக்தி, நாட்டிய ராணி, பவளக்கொடி, மங்கையர்க்கரசி, மாயாவதி, ரத்னகுமார், வாழ்க்கை, வினோதினி, வேலைக்காரி போன்றவை.

இவற்றில் சில படங்களைப் பற்றி இங்கு காண்போம்.

1. அபூர்வ சகோதரர்கள்: ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரிப்பான இப்படம், அலெக்ஸாண்டர் டூமாஸின் புகழ்பெற்ற நாவலான “The Corsican Brothers” ஐத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் வரும் இரட்டையர்கள் வேடத்திற்கு சந்திரலேகா படத்தில் நடித்துப் புகழ் பெற்றிருந்த எம் கே ராதாவும், கதாநாயகியாக பி பானுமதியும் தேர்வு செய்யப் பட்டனர். வழக்கறிஞராக இருந்து இயக்குனரான டி ஜி ராகவாச்சாரி என்னும் ஆச்சார்யா இதன் இயக்குனராக நியமிக்கப் பட்டார். இதில் வரும் வில்லன் மாரப்ப பூபதி வேடத்திற்கு திரு பி யு சின்னப்பாவை அணுகினர். ஆனால் அவர் தனது கதாநாயக உருவகம் பாதிக்கப்படும் என்று மறுத்து விட்டார். ரஞ்சனை போடலாம் என்று நினைத்தார்கள், அதுவும் சரிப்பட்டு வரவில்லை. வேறு எவரும் சரியான ஆள் கிடைக்கவில்லை. அப்போது திரு வாசனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

கன்னடத்தில் புகழ் பெற்றிருந்த, நாடக நடிகரும், திரைப்பட நடிகருமான ஆர் நாகேந்திர ராவ் அப்போது ஒரு படத் தயாரிப்பு விஷயமாக வாசனை சந்திக்க வந்திருந்தார். அவரைப் போடலாம் என்று வாசன் கூறினார். ஆனால் அவரது தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சரியாக இல்லை. ஆனாலும் அவர் தனது அனுபவத்தினால் தனது குறைகள் தெரியாமல் சிறப்பாக நடித்தார்.

படத்தின் பாடல்கள் சிறப்பாக இருந்தன (இசை - எஸ் ராஜேஸ்வரராவ், எம் டி பார்த்தசாரதி, ரீமா). லட்டு லட்டு என்று ஒரு பாடல், பானுமதி வில்லனிடம் இருந்து தப்பிக்க பாடுவது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளின் வரிகளில் அமைந்திருந்தது. (பாடல், கொத்தமங்கலம் சுப்பு, வ. சீதாராமன்). பி பானுமதி இந்தப பாடலுக்கு திறமையாக பாடி ஆடி பெயர் பெற்றார். இந்தப் படத்தின் மூலம் அவர் திரைவானில் பெரும் உயரத்தை எட்டினார்.

இதன் இந்தி வடிவமான நிஷான் படத்திற்கு ராஜேஸ்வரராவ் பியானோவில் வாசித்துக் காண்பித்த ஒரு மெட்டு வாசன் அவர்களை மிகவும் கவர்ந்து விட்டது. தமிழிலும் இந்த மெட்டில் ஒரு பாடல் வர வேண்டும் என்று அவர் விரும்பினார். படப் பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்தப் பாடல் படத்தில் சேர்க்கப் பட்டது, அதுதான் "மானும் மயிலும் ஆடும் சோலை" என்ற பாடல். இதன் பியானோ இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதன் இந்தி வடிவத்தில் ரஞ்சன், பானுமதி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதுமன்றி விமரிசர்களிடையும் நல்ல பெயரைப் பெற்றது.ஜெமினி நிறுவனத்திற்கு இது ஒரு பெரும் வெற்றிப் படமாகும்.

2. கன்னியின் காதலி: 1949 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், கே. ஆர். ராம்சிங், அஞ்சலிதேவிமற்றும் பலரும் நடித்துள்ளனர். மாதுரி தேவி இதில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  ஆங்கில நாடகாசிரியரான ஷேக்ஸ்பியரின் பிரபல நகைச்சுவை நாடகமானபன்னிரண்டாவது இரவு என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது இத்திரைப்படம். என். டி. சுந்தரத்தின் வசனத்திலும் வேதாந்தம் ராகவய்யாவின் நடனப்பயிற்சியிலும் உருவான இத்திரைப்படம் சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. கண்ணதாசனின் பாடல்களுக்கு எம். எல். வசந்தகுமாரி  பின்னணிக்குரல் கொடுத்திருக்கிறார்.

ஒரே சாயலுள்ள அண்ணன் ஆதித்தனும் தங்கை சந்திரிகாவும் விதிவசத்தால் பிரிக்கப்பட்டு வேறு வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். (அண்ணனாகவும் தங்கையாகவும் மாதுரி தேவிநடிக்கிறார்). தனது பெண்மையைக் காத்துக் கொள்ளும் பொருட்டு ஆண்வேடம் தாங்கி கலைமணி என்ற பெயர் பூண்ட சந்திரிகா, வசந்தபுரி மன்னனின் (எஸ்.ஏ.நடராஜன்) ஆஸ்தான கவியாக அமர்ந்து அவனது காதலியான மேகலையிடம் (அஞ்சலிதேவி) காதல் தூது செல்கிறாள். கலைமணியை உண்மை வாலிபன் என எண்ணிய மேகலை தன் உள்ளத்தைப் பறி கொடுக்கிறாள். சமயத்தில் ஆதித்தனும் அங்கு வருகிறான். உடன்பிறந்தவர்களின் தோற்றப் பொருத்தத்தால் தோன்றிய குழப்பங்கள் தீர்ந்து மேகலையை ஆதித்தனும், வசந்த குமாரனைச் சந்திரிகாவும் மணக்கின்றனர். கதையும் சுபமாக முடிகிறது.

பாடல்கள்: கலங்காதிருமனமே... (திரு.கண்ணதாசனின் முதல் பாடல்)
காரணம் தெரியாமல்... (பாடல்: கண்ணதாசன்)
புவி ராஜா (பாடல்: கண்ணதாசன்)

(இதன் தொடர்ச்சியை அடுத்த பகுதியில் காண்போம்)

புகைப் படங்கள்: 1. அபூர்வ சகோதரர்கள். 2. கன்னியின் காதலி. (COURTESY : THE HINDU, AND RANDOR GUY)
"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 11"

1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்:

அபிமன்யு, அஹிம்சாயுத்தம், ஸ்ரீ ஆண்டாள், ஆதித்தன் கனவு, இது நிஜமா, என் கணவர், ஜீவ ஜோதி, காமவல்லி, செண்பகவல்லி, ஸ்ரீ கிருஷ்ணதுலாபாரம், கோகுலதாசி, ஞானசௌந்தரி, சந்திரலேகா, சக்ரதாரி, சம்சார நௌகா, சம்சாரம், ஸ்ரீ லட்சுமி விஜயம், சிகாமணி, நவீன வள்ளி, திருமழிசை ஆழ்வார், தேவதாசி, பக்த ஜனா, பில்ஹனா, பிழைக்கும் வழி, பிரம்மரிஷி விஷ்வாமித்திரா, போஜா, மகாபலி, மாரியம்மன், மோகினி, ராம்தாஸ், ராஜமுக்தி, வானவில், வேதாள உலகம் ஆகியவை.

இவற்றில் சில படங்களைப் பற்றி:

1. அபிமன்யு: ஜூபிடர் பிக்சர்சின் தயாரிப்பில் உருவான இந்தப் படத்திற்கு, இயக்குனராக காசிலிங்கம் என்பவர் அறிமுகம் செய்யப்பட்டார். வசனம் எழுதும் உதவியாளாராக இந்தப்படத்தில் பணிபுரிந்தவர், பின்னாளில் தனது புரட்சிகரமான வசனங்களால் பல படங்களுக்கு உயிர்தந்து பின்னர் தமிழகத்தின் முதல்வருமான திரு மு கருணாநிதி. அதே போன்ற இன்னொருவரும் இப்படத்தில் அர்ஜுனன் வேடம் தரித்து நடித்தார். அவர்தான் மக்கள் திலகம் எம் ஜி ஆர்.

நாயகனாக எஸ் எம் குமரேசன் என்ற புதுமுகம் அறிமுகமானார். இவர் இந்தப் படத்தின் மூலம் பெரும்புகழ் பெற்று, தனது தவறான நடைத்தைகளினால் பின்னாளில் காணாமல் போனார். கதாநாயகி யூ ஆர் ஜீவரத்தினம்.


இசை எஸ் எம் சுப்பையா நாயுடு - சி ஆர் சுப்பராமன். "புது வசந்தமாமே வாழ்விலே" என்ற பாடல் திருச்சி லோகநாதன்-யூ ஆர் ஜீவரத்தினம் குரல்களில் மிகப் பிரபலம், இப்பாடலுக்கு உண்மையில் இசையமைத்தவர் சுப்பராமனிடம் எடுபிடியாக பணிபுரிந்த ஒரு சிறுவன். அவர்தான் பின்னாளில் மெல்லிசை மன்னர் என்று தமிழ்த்திரையுலகை கலக்கிய திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள். பாடல்கள் பாபநாசம் சிவன்.

இப்படத்தில் பணிபுரிந்த பலர் பின்னாளில் பிரபலங்களாக உருவெடுத்திருக்கிறார்கள்.அத்தகைய இன்னொருவர் தயாரிப்பாளர் சின்னப்பா தேவர்.

இப்படம், வசனங்கள், பாடல்கள், இசை மேலும் சிறந்த ஒளிப்பதிவிற்க்காக நினைவு கொள்ளப் படுகிறது.

2. ஸ்ரீ ஆண்டாள்: பி. எஸ். கோவிந்தன், யு. ஆர். ஜீவரத்தினம்
வி. ஏ. செல்லப்பா, காளி என். ரத்னம், ஜி ஆர் ஸ்ரீராமுலு, சௌதாமினி, பி. எஸ். ஞானம் ஆகியோர் நடித்த படம். இசை - ஜி ராமநாதன் - ரங்கநாதன்.

ஆண்டாளின் கதைக்காகவும், இசை - பாடல்களுக்காகவும் இந்தப் படம் நன்றாக ஓடியது.

3. சந்திரலேகா: எம். ஆர். ராதா, ரஞ்சன், என். எஸ். கிருஷ்ணன், டி. ஆர். ராஜகுமாரி, சுந்தரிபாய், டி. ஏ. மதுரம், வி என் ஜானகி, ஜாவர் சீதாராமன், எல்.நாராயணராவ், வேலாயுதம் ஆகியோர் நடித்திருந்தனர்.

முதலில் இப்படத்திற்காக ஜெமினி கதை இலாகா கூறிய கதை வாசன் அவர்களுக்கு பிடிக்கவில்லை. நிராகரித்து விட்டார். ஆனால் கதாநாயகியின் "சந்திரலேகா" என்ற பெயர் மிகவும் பிடித்து விடவே, உடனடியாக தனது அடுத்த படத்திற்கு இப்பெயரை சூட்டி பெரிய அளவில், தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து விட்டார். அவரிடம் படத்தின் தலைப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. ஜெமினி நிறுவத்தின் கதை எழுத்தாளாரான வேம்பத்தூர் கிட்டு புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான G. W. M. Reynolds எழுதிய “Robert Macaire, the French Male Bandit in England” (1848) என்ற நாவலில் வரும் ஒரு காட்சியை, - நாயகி சாட்டையால் அடித்து ஆட சொன்னாலும் ஆட மறுப்பது - துவக்கக் காட்சியாக  விவரித்ததும், வாசனுக்கு மிகவும் பிடித்து விடவே மளமளவென தயாரிப்பு வேலைகள் துவங்கின.

முதலில் இதில் சர்க்கஸ் காட்சிகள் இல்லை. படம் மிகவும் பிரம்மாண்டமாக, நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்ததால், அவ்வப்போது தோன்றும் யோசனைகளின்படி காட்சிகள் அமைக்கப் பட்டன. 1947 ல் கலைவாணர் சிறையிலிருந்து வெளி வந்ததும், மீண்டும் அவருக்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டன. சர்க்கஸ் காட்சிகள் தமிழ் சினிமாவில் துரதிர்ஷ்ட வசமாக பெயர் பெறாமல் போன கே ராம்நாத் அவர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டன.

சந்திரலேகா இந்தியாவிலேயே அதுவரை எவருமே முயற்சி செய்திராத மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்கப்பட்டது.

உச்சகட்டமாக இதில் வரும் முரசு நடனம் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, பெரிதளவில் அனைவராலும் பேசப்பட்டது. டி ஆர் ராஜகுமாரியின் வாழ்வில் இது ஒரு பெரிய திருப்புமுனை, இப்படத்தின் மூலம் அவர் புகழேணியின் உச்சியை அடைந்தார்.

நாயகனாக எம் கே ராதா, வில்லனாக ரஞ்சன் ஆகியோர் திறம்பட நடித்திருந்தனர். ரஞ்சன் கடைசி நேரத்தில் இவ்வேடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். இவரும் தனது அபார நடிப்பினாலும், வாள் வீச்சினாலும் பெரும் புகழ் அடைந்தார். இதன் ஹிந்தித் தயாரிப்பிலும் இவரே நடித்தார்.

ஜெமினி ஸ்டூடியோவின் மிகச் சிறந்த வெற்றிப் படமாகும் இது.

4.  ராஜமுக்தி: சிறையிலிருந்து பாகவதர் வெளி வந்து தனது சொந்தத் தயாரிப்பில் நடித்து வெளியிட்ட படம். கதாநாயகியாக பி பானுமதி. முக்கிய வேடத்தில் வி என் ஜானகி ஆகியோர் நடித்திருந்தனர். இசை - சி ஆர் சுப்பராமன். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியிடப்பட்ட இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தின் மூலம் பாகவதரின் சரிவு துவங்கியது எனலாம். இவ்வகையில் தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்படம் பெயர் பெறுகிறது.

புகைப் படங்கள்: 1.ஸ்ரீ அபிமன்யு. 2. ஸ்ரீ ஆண்டாள். 3. சந்திரலேகா. 4. ராஜமுக்தி.
(COURTESY: THE HINDU AND RANDOR GUY)

Saturday, 20 August 2016

"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 10"

1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்:

அர்த்தனாரி,ஆரவல்லி சூரவல்லி,உதயணன் வாசவதத்தா, குமரகுரு, குண்டலகேசி, சகடயோகம், சுபத்ரா, ஸ்ரீ முருகன், ராம் ரஹிம், வைங்கி, வால்மீகி, வித்யாபதி, விஜயலட்சுமி, விகடயோகி ஆகியவை.

இவற்றில் குறிப்பிடத் தகுந்த அளவு பிரபலாமான படங்கள் எதுவும் இல்லை, அவை பற்றிய குறிப்புகளும் இல்லை. ஸ்ரீ முருகன் என்ற படத்தில்படத்தில் திருஎம்ஜி ஆர் நடித்தது மட்டுமே ஓர் குறிப்பிடத் தக்க செய்தி. இந்த படத்தில் அவர் சிவனாகத் தோன்றி ஆடிய நடனத்தைப்நடனத்தைப் பார்த்து அவருக்கு தங்களது அடுத்த படத்திலும் இதன் தயாரிப்பாளர்களானதயாரிப்பாளர்களான ஜூபிடர் பிக்சர்ஸ் அவருக்கு வாய்ப்பளித்தனர். அதுதான் "ராஜகுமாரி". அதன் பின்னர் நடந்ததை தமிழ்நாடே அறியும்.

1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்:

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஏகம்பவாணன், கஞ்சன், கன்னிகா, கடகம், கங்கணம், குண்டலகேசி, சண்பகவல்லி, சித்ரபகாவலி, சுறுசுறுப்பு, சுலாசனா, தன அமராவதி, தாய்நாடு, தியாகி, துளசி ஜலந்தர், தெய்வ நீதி, நாம் இருவர், பக்த துளதிதாஸ், பங்கஜவல்லி, பிரம்மரிஷி விஸ்வாமித்ரா, பைத்தியக்காரன், பொன்னருவி, மதனமாலா
மகாத்மா உதங்கர், மலைமங்கை, மிஸ் மாலினி, ராஜகுமாரி, ஸ்ரீ லட்சுமி விஜயம், விசித்ர வனிதா, வீர வனிதா, வேதாளபுரம், ஜம்பம், ருக்மாங்கதன், ஜீவஜோதி ஆகியவை.

இவற்றுள் நன்கு பிரபலாமான 2 படங்களைப பற்றி மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

1. நாம் இருவர்: டி ஆர் மகாலிங்கம், பி ஆர் பந்துலு, வி கே ராமசாமி,கே சாரங்கபாணி, டி ஆர் ராமச்சந்திரன், டி கே ராமச்சந்திரன், டி ஏ ஜெயலக்ஷ்மி, பேபி கமலா ஆகியோர் நடித்திருந்தனர். இது அப்போது பின்னாளில் இயக்குனராக புகழ்பெற்ற ப நீலகண்டன் அவர்களின் "த்யாக உள்ளம்" என்ற மேடை நாடகத்தின் திரை வடிவமாகும். இப்படத்திற்கு அவரேஅவரே கதாசிரியராகவும், துணை இயக்குனராகவும் நியமிக்கப் பட்டார்.

இதில் கதாநாயகனாக நடிக்க முதலில் எஸ் வி சஹஸ்ரநாமம்தான் தெரிந்தேடுகப்பட்டார். ஆனால், என் எஸ் கே அவர்களின் கொலை வழக்கினால், அவரால் படப் பிடிப்பில் கலந்து கொள்ளாத சூழ்நிலை ஏற்பட்டபோது, ஏ வி மெய்யப்பன் அவர்கள் டி ஆர் மகாலிங்கத்தை கதாநாயகனாக்கினார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த டி ஏ ஜெயலக்ஷ்மி காதாநாயகி. பி ஆர் பந்துலு, இளகியமனம் படைத்த கதாநாயகனின் அண்ணனாக நடித்திருந்தார். கதாநாயகனின் தங்கையாக நடித்த
பேபி கமலாதான் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற நடிகையாகவும், நாட்டியத் தாரகையாகவும் விளங்கிய குமாரி கமலா.

1947 ஆம் ஆ ண்டில்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. மெய்யப்பன், மகாத்மாவிற்கு மக்களிடையே இருந்த பெரும் வரவேற்பை இப்படத்தில் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டார். மகாத்மாவின் சிலைசிலை, காந்தி குல்லாய் அணிந்த நடிகர்கள், ராட்டை சுற்றுவது, ஜெய் ஹிந்த் என்று சொல்லி ஒருவரை ஒருவர் வாழ்த்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. பாரதியாரின் பாடல்களான, "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" "வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே" போன்ற பாடல்கள் திருமதிடி கே பட்டம்மாள் பாட, பேபி கமலா நடனத்தில் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

இப்படம் AVM நிறுவனத்தை புகழேணியின் உச்சிக்கு கொண்டு சென்றது தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இது ஒரு மைல் கல்லாகும்.

2. மிஸ் மாலினி: இதில் கொத்தமங்கலம் சுப்பு, புஷ்பவல்லி, சுந்தரிபாய், என் சீதாராமன் (பின்னாளில் ஜாவர் சீதாராமன்), ஆர் கணேசன் என்ற ஜெமினி கணேசன் (அறிமுகம்) ஆகியோர் நடித்திருந்தனர். இது புகழ் பெற்ற எழுத்தாளர் திரு ஆர் கே நாராயணன் அவர்களின் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. படித்தவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தபோதிலும் பாமர மக்களை கவரவில்லையாதலால், பெரும் வெற்றியை எட்டவில்லை. பின்னாளில் வாசன் இதைப் பற்றிக் குறிப்பிடுகையில், அறிவுஜீவிகளுக்காக படம் எடுத்தால் பணம் சம்பாதிக்க இயலாது என்று கூறினார்.

அடுத்த தொடரில் 1948 ஆம் ஆண்டு வெளி வந்த சில படங்களைப் பற்றி காண்போம்.
நன்றி வணக்கம்.

புகைப்படங்கள்: 1. ஸ்ரீ முருகன். 2. நாம் இருவர். 3 மிஸ் மாலினி
(COURTESY: THE HINDU AND RANDOR GUY)

:
"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 9"

இன்று 1945 ஆம் ஆண்டு வெளி வந்த படங்களைப் பற்றிக் காண்போம்.

என் மகன்,கண்ணம்மா என் காதலி, சாலிவாகனன், சௌ சௌ, கலிகால மைனர், பள்ளி நாடகம், சூரப்புலி, பக்த காளத்தி, பர்மா ராணி, பரஞ்சோதி , மஹா மாயா, மானசம்ரட்சணம், மீரா, ஸ்ரீவள்ளி ஆகியவை. இவற்றில் "மீரா", "ஸ்ரீ வள்ளி" ஆகிய இரண்டு படங்களும் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களாகும்.

மீரா:
பால மீரா (குழந்தை ராதா) வளர்ந்த வீட்டுக்கு, கண்ணன் பிறந்த புண்ணிய தினத்தில் மகான் ரூபகோஸ்வாமி (செருக்களத்தூர் சாமா) வருகிறார். அவர் கொண்டுவந்த கிருஷ்ணர் சிலை குழந்தையின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது. பால மீரா நந்தபாலனையே தனது மணாளனாக நினைத்து மாலையிடுகிறாள்.

மீரா (எம். எஸ். சுப்புலக்ஷ்மி) யௌவனப் பிராயத்தை அடைந்த போது பாட்டனாரின் விருப்பத்திற்கு இணங்கி மேவார் ராணாவை (சித்தூர் வி. நாகையா) மணந்து சித்தூர் செல்கிறாள். சித்தூர் அரண்மனையின் அழகிய உத்தியான வனங்களில் உலாவும் போது, மீராவின் உள்ளம் குழலூதிய நீலநிறத்துப் பாலகனை எண்ணி எண்ணி உருகுகிறது.

ஆரம்பத்தில் மேவார் ராணா தான் கைப்பிடித்த தர்ம பத்தினியின் கிருஷ்ண பக்தியையும் அவள் பாடிய கீதங்களையும் குறித்துப் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறான். போகப் போக, அவனுக்குச் சலிப்பு உண்டாகிறது. ராணாவின் சகோதரி உதாவும் (கே. ஆர். செல்வம்) சகோதரன் விக்ரமனும் (டி. எஸ். பாலையா) மீராவைக் குறித்து அவனிடம் புகார் செய்து கோபமூட்டி வருகிறார்கள். விஜயதசமியன்று நடந்த தர்பாருக்கு மீரா வருவதாக வாக்களிக்கிறாள். ஆனால் தர்பாருக்குப் புறப்படும் போது கண்ணன் வேய்ங்குழலின் நாதம் அவளைக் கவர்ந்திழுக்கச் சபா மண்டபத்திற்குப் போவதற்குப் பதிலாகக் கோயிலுக்குப் போகிறாள். ராணா கோபங்கொண்டு மீராவை நிந்தித்து விட்டு வேட்டைக்குச் செல்கிறான்.

விக்கிரமனுடைய தூண்டுதலின் பேரில் உதா மீராவுக்கு விஷம் கொடுத்து விட்டுப் பிறகு வருந்துகிறாள். பாம்பின் தலைமீது நடனமாடிய இறைவனின் அருளால் மீராவுக்குத் தீங்கு நிகழாததைக் காண்கிறாள். உதாவின் மனம் மாறுகிறது.

டில்லி பாதுஷாவின் சபையில் இருந்த தான்சேன், மான்சிங் என்ற இருவர் மீராவின் பாடல்களைக் கேட்க ஆவல் கொண்டு மாறு வேடம் பூண்டு வருகிறார்கள். இரவெல்லாம் கோயிலில் மெய்ம்மறந்து இருந்தபிறகு அவரகள் பாதுஷா அளித்த முத்துமாலையை மீராவிடம் தந்துவிட்டுக் கிளம்புகிறார்கள்.

காட்டிலிருந்து ராணா திரும்பி வந்ததும் விக்கிரமனும் தளபதி ஜயமல்லும் (எம். ஜி. ராமச்சந்திரன்) முத்துமாலையைக் காட்டி ராணாவுக்குத் தூபம் போடுகிறார்கள். "அது இனிமேல் கோயில் அல்ல. பீரங்கி வைத்து இடித்துத் தள்ளுங்கள்", என்று ராணா உத்தரவு இடுகிறான்.

ஆலயத்தை இடிக்க உத்தரவிட்டது ராணா தான் என்று தெரிந்ததும் மீரா, அரண்மனை வாழ்வும் அரசபோகமும் தனக்கு உகந்தவை அல்ல என்று தீர்மானித்து தம்புராவையே துணையாகக் கொண்டு சித்தூரை விட்டுப் பிருந்தாவனம் செல்கிறாள். அங்கிருந்து ரூபகோஸ்வாமியுடன் துவாரகாபுரிக்குப் போகிறாள். வெகுகாலமாக மூடிக்கிடந்த துவாரகா நாதனின் சந்நிதிக் கதவைத் திறந்து தரிசனம் அருள வேண்டுமென்று கதறுகிறாள். ஆலயக்கதவு திறக்கிறது. அடியாள் மீரா பரந்தாமனுடன் ஐக்கியமாகின்றாள்.

இப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன், கல்கி கிருஷ்ணமூர்த்தி (காற்றினிலே வரும் கீதம்) ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர். இன்றளவும் இப்படத்தின் பாடல்கள் பலராலும் விரும்பப்படுவையாக உள்ளன. இசை - திரு எஸ் வி வெங்கட்ராமன்.

நந்தபாலா என் மணாளா
காற்றினிலே வரும் கீதம்
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே
கிரிதர கோபாலா
லீலைகள் செய்வானே
ஹே ஹரே தயாளா
மறவேனே என் நாளிலுமே
சராசரம் உன்னை யாரும் தேடுமே
அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ

2. ஸ்ரீவள்ளி:

A V மெய்யப்பன், A T கிருஷ்ணசாமி இணைந்து இயக்கிய படம். திரைக்கதை - A T கிருஷ்ணசாமி. தயாரிப்பு - A V மெய்யப்பன், இசை - T M ராஜகோபால் ஷர்மா - R சுதர்சன் ஆகியோர்.

இப்படத்தை எம் கே தியாகராஜ பாகவதரை வைத்து தயாரிப்பதாக இருந்தது.  வேறு சில காரணங்களினால் பிரச்சினைகளினால் அவரால் நடிக்க இயலவில்லை. கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த வசுந்தராதேவி (வைஜெயந்திமாலாவின் தாயார்) மெய்யப்பன் தெரிவு செய்யும் கதாநாயகர்களை நிராகரித்து வந்தார். அதனால் மெய்யப்பன் அவர்கள் முற்றிலும் புதுமுகங்களை வைத்து படத்தை தயாரிக்க முடிவு செய்து, டி ஆர் மாகலிங்கம், குமாரி ருக்மணி (நடிகை லக்ஷ்மியின் தாயார்) ஆகிய இருவரையும் வைத்து படத்தைத் தயாரித்தார். எஸ் ஜி கிட்டப்பாவைப் போன்று பாடும் டி ஆர் மகாலிங்கத்தின் குரல் அனைவரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. கதாநாயகிக்கு  குமாரி ருக்மணியே பாடி நடித்தார்.

ஆனால் டி ஆர் மகாலிங்கத்தின் குரலின் முன் ருக்மணியின் குரல் சற்று சோடை போனது போல் ரசிகர்கள் கருதியதால், மெய்யப்பன், உடனே டி ஏ பெரியநாயகி அவர்களை அனைத்துப் பாடல்களையும் மறு ஒலிப்பதிவு செய்தார். தமிழ்நாட்டில் படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குகளிருந்தும் படச்சுருளை வரவழைத்து, அசுரகதியில் ஒலிப்பதிவு செய்து படத்துடன் இணைத்து, ரயில், கார் இவற்றின் மூலம் திருப்பி அனுப்பினார். இதற்கு ஏக வரவேற்பு இருந்தது.

இந்தப் படம் டி ஆர் மகாலிங்கம், ருக்மிணி, ஆகியோருக்கு பெரிய பேரை பெற்றுத் தந்தது. AVM நிறுவனத்திற்கும் புருத்த லாபம் ஈட்டித் தந்தது.

அடுத்த பகுதியில் 1946 ஆம் வருடம் வெளிவந்த சில படங்களைப் பார்ப்போம். நன்றி! வணக்கம்.
(புகைப்படங்கள் :COURTESY - THE HINDU & RANDORGUY)
"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 8"

இன்று 1944 ஆம் ஆண்டு வெளி வந்த படங்களைப் பற்றிக் காண்போம்.

தாசி அபரஞ்சி, பர்த்ருஹரி, பக்த ஹனுமான், பிரபாவதி, பூம்பாவை, மகாமாயா, ராஜ ராஜேஸ்வரி, ஜகதலப்பிரதாபன், ஹரிதாஸ், ஹரிச்சந்திரா போன்றவை. இரண்டாம் உலகப் போரின் காரணமாக திரைப் படங்களின் தயாரிப்பு குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தது. இவற்றில் குறிப்பிடும்படியாக இரண்டு படங்கள் மட்டுமே பெரும் வெற்றி பெற்றன. 1. ஜகதலப்பிரதாபன், 2. ஹரிதாஸ்.

1. ஜகதலப்பிரதாபன்:
ஆர்யமாலா, சிவகவி ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து S M ஸ்ரீராமுலு, K S நாராயண அய்யங்கார் இருவரும் சேர்ந்து பக்ஷிராஜா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கி இந்தப் படத்தைத் தயாரித்தனர்.

"12 MINISTERS' TALE" என்ற நாடோடிக் கதையைத் தழுவி எடுக்கப் பட்ட படம். இளவரசன் பிரதாபன் தான் இந்திர, நாக, அக்னி, வருண லோக இளவரசிகளை மணம் புரிய வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட அரசன் வெகுண்டு அவனை சிரச்சேதம் செய்யுமாறு உத்தரவிடுகிறார். தனது தாயின் உதவியால் தப்பி அவ்வை என்ற பெண்மணியிடம் அடைக்கலம் புகும் அவன் அவ்வையால் உருவாக்கப்பட்ட குளத்தில் இந்திராணி நீராடிக் கொண்டிருக்கும்போது அவளது ஆடைகளை கவர்ந்து வந்து விடுகிறான். தனது ஆடைகளை தேடி அவ்வையின் குடிலுக்கு வரும் இந்திராணி,அங்கு அவ்வையால் குழந்தையாக மற்றப் பட்ட பிரதாபனை எடுத்து கொஞ்சுகிறாள். தனது உண்மையான உருவத்திற்கு மாறும் பிரதபனிடம் காதல் பிறக்கிறது, இருவரும் மணம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.

இடையில் மற்றொரு நாட்டு அரசன் பிரதாபனை தனது தளபதியாக நியமிக்கிறான். அந்த அரசன் இந்திராணி மீது காதல் கொண்டு, தனது இல்லாத நோய்க்கு மருந்து கொண்டு வரும்படி அவனை நாகலோகத்திற்கு அனுப்புகிறான்.அங்கு அவன் எவ்வாறு நாகலோக, அக்னிலோக, வருணலோக இளவரசிகளை மணம்  முடித்து, அனைத்து பிரச்சினகைளையும் சமாளித்து நால்வருடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்துகிறான் என்பதே மீதிக் கதை.

இளவரசனாக பி யு சின்னப்பா, இந்திராணியாக - எம் எஸ் சரோஜினி, நாக கன்னிகையாக யூ ஆர் ஜீவரத்தினம், அக்னிகுமாரியாக எஸ் வரலக்ஷ்மி, வருண குமாரியாக ஜெயலக்ஷ்மி ஆகியோர் நடித்திருந்தனர்.

இறுதிக் காட்சியில் பி யு சின்னப்பா பல வேடங்களில் தோன்றி அனைத்து இசைக் கருவிகளையும்தானே வாசித்து பாடும் ஒரு பாடல் அந்நாளில் பெரிதும் பேசப்பட்டது. குமாரி கமலாவின் பாம்பு நடனமும் பலரையும் கவர்ந்தது. இந்தப் படம் பி யு சின்னப்பாவிற்கு ஒரு வெற்றிப் படமாகும்.

2. ஹரிதாஸ்:

ஹரிதாஸ் திரைப்பட வரலாற்றிலேயே ஒரே திரையரங்கில் மூன்று தீபாவளிகள் கண்ட முதல் திரைப் படம். பாகவதரின் அறிமுகக் காட்சியே மிகவும் பிரமாண்டமாக இருக்கும். குதிரையில் அமர்ந்தவாறே "வாழ்விலோர் திருநாள்" என்று அவர் பாடிக் கொண்டே அறிமுகமாகும் காட்சி பலத்த கரகோஷத்தைப் பெற்றது. அந்தக் குதிரை பாகவதரின் சொந்தக் குதிரை! கதாநாயகர்களின் "INTRO" விற்கு இதுதான் முதல் படி.

இந்தப் படத்திம் பாடல்கள் அனைத்துமே பிரபலம். சாருகேசியில் அமைந்த"மன்மத லீலையை வென்றார் உண்டோ" பல தரப்பினரையும் கவர்ந்தது. யதுகுல காம்போதி மற்றும் அடாணா இராகத்தில் அமைந்த "என்னுடல் தன்னில் ஈ மொய்த்தபோது" என்ற பாடல் நெஞ்சை உருக்கும். மக்கள் திலகம் எம் ஜியாரின் மனம் கவர்ந்த பாடல் இது.  மனோலயத்தில் அமைந்த "அன்னையும் தந்தையும்தானே" நவரோஜ் ராகத்தில் அமைந்த "கிருஷ்ணா, முகுந்தா, முராரே", பேகடா ராகத்தில் அமைந்த "நிஜமா, இது நிஜமா" போன்ற பாடல்கள் அனைத்துமே பாகவதரின் கிரீடத்தில் அமைந்த விலை மதிப்பற்ற வைரங்கள்.

இந்தப் படத்தின் லாபத்தை மூலமாக வைத்து :மதுரா நிட்டிங் கம்பெனி" என்ற நிறுவனைத்தை மதுரையில் துவக்கினார்கள் என்றால் இந்தப் படத்தின் வெற்றியைப் பற்றிக் கூறவும்வேண்டுமோ.
"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 7"

1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு :

அக்ஷயம், அருந்ததி,, அசட்டுப்பிள்ளை, உத்தமி, காரைக்கால் அம்மையார், குபேர குசேலா, சிவகவி, ஜோதிமலர், திவான் பகதூர், தேவகன்யா, மங்கம்மா சபதம். இவற்றில் குறிப்பிடத் தக்கவை, காரைக்கால் அம்மையார், குபேர குசேலா, சிவகவி, மங்கம்மா சபதம் போன்றவை.

1. காரைக்கால் அம்மையார்:

காரைக்கால் அம்மையார் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, கே. சாரங்கபாணி, டி எஸ் துரைராஜ், ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் சிறப்பு பாடல்கள், புகழ் பெற்ற நடராஜ் - சகுந்தலா தம்பதியினரின் சிவ பார்வதி நடனம் ஆகியவை.

2. குபேர குசேலா: குசேலரின் கதையை சிறிது மாற்றி நகைச்சுவையாக குசேலரே குபேரன் ஆவது போல் அமைக்கப் பட்ட திரைக்கதையில் உருவான படம். இதில் மூன்று குபேரர்கள். உண்மையான குபேரன் (D பாலசுப்ரமணியம்), பேராசையால் குபேராராக மாறும் குசேலர் (பி யு சின்னப்பா), குபேராராக மாறும் ஒரு பூதம்பூதம் (மீண்டும் சின்னப்பா). குசேலராக பாபநாசம் சிவன் நடித்திருந்தார். அவர் தனது சொந்தக் குரலில்"கண்ணா கண்ணா கண்ணா கருணை செய் கமலக் கண்ணா" என்ற பாடலைப் பாடி நடித்திருந்தார். ஆனால் துரதிஷ்ட வசமாக, இந்தப் பாடல் இசைத்தட்டில் பதிவேற்றப்படவில்லை.

இதைத் தவிர பி யு சின்னப்பா பாடியபாடிய "நடையலங்காரம்கண்டேன்"  "மாலை சூட  வந்தேன் மல்லிகா" போன்ற பாடல்களும், டி ஆர்ஆர் ராஜகுமாரி பாடிய "என்னை விட்டு எங்கே சென்றீர்" பாடலும் பிரபலம். பாடல்களை பாபநாசம் சிவனும் உடுமலை நாராயண கவியும் இயற்ற, குன்னக்குடி வெங்கட்ராம அய்யர் இசையமைத்திருந்தார். நடனம் வழுவூர் ராமைய்யா பிள்ளை, ஒளிப்பதிவு மார்க்கஸ் பாட்லே. என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம், டி எஸ் துரைராஜ் ஆகியோர் நகைச்சுவை பாத்திரங்கள் ஏற்றிருந்தனர்.

3. சிவகவி: சிவகவி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடுவின் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. சிவபக்தியை, சிவசோதனையை மாயாஜாலக் காட்சிகளின் மூலம் சொல்லும் இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன், டி. பாலசுப்பிரமணியம், டி. ஆர். ராஜகுமாரி, டி. ஏ. மதுரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பக்ஷிராஜா பிலிம்ஸாரால் தயாரிக்கப்பட்டது. ராமையா பிள்ளை இத்திரைப்படத்தின் நடனங்களை அமைத்திருந்தார்.

இப்படத்தில் மொத்தம் 29 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன் அனைத்துப் பாடல்களையும் இயற்றியிருக்கிறார். அவற்றில் பின்வரும் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றிருந்தன:

வதனமே சந்த்ர பிம்பமோ (ராகம்: சிந்து பைரவி, தாளம்: திஸ்ரம், பாகவதர்)
அம்பா மனங்கனிந்துனது கடைக்கண்டார் (ராகம்: பந்துவராளி, தாளம்: ஆதி, பாகவதர்)
வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ (ராகம்: செஞ்சுருட்டி, தாளம்: ஆதி, பாகவதர்)
ஸ்வப்பன வாழ்வில் மகிழ்ந்து (பாகவதர்)

படத்தின் நீளத்தினால் சற்று தொய்வு ஏற்பட்டாலும், பாடல்களுக்காகவே ஓடிய படம் இது.

மங்கம்மா சபதம் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆசார்யாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், வசுந்தரா, என். எஸ். கிருஷ்ணன் ஆகியோர்  நடித்திருந்தனர். ரஞ்சன் தந்தை, மகன் என இரு வேடங்களில் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோரின் பாடல்களுக்கு எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஷ்வரராவ் ஆகியோர் இசையமைத்தனர். மங்கம்மா சபதம் திரைப்படம் அக்காலத்தில் 4 மில்லியன் ரூபாய்களை நிகர லாபமாகப் பெற்று பெரும் வெற்றி பெற்றது.

கதைச் சுருக்கம்: கலிங்க நாட்டில் வெங்கடாசலம என்பவருக்கு பிறந்தவள் மங்கம்மா (வசுந்தரா). நல்ல அழகி. ஒரு நாள் மாடப்புறா ஒன்றைத் துரத்திக் கொண்டு அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழைகிறாள் மங்கம்மா. அங்கு இளவரசன் சுகுணன் (ரஞ்சன்) அவளை அணுகிப் பலாத்காரம் செய்ய முயலுகிறான். மங்கம்மா அவனிடம் இருந்து தப்பித்து வெளியேறுகிறாள். மங்கம்மாவின் மீது மோகம் கொண்ட சுகுணன் அடப்பங்காரனின் (பி. அப்பணய்யங்கார்) உதவியுடன், மங்கம்மாவின் இருப்பிடத்தை அறிந்து, அங்கு சென்று அவளிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்கிறான். புத்திசாலியான மங்கம்மா அவனைக் கீழே தள்ளி விடுகிறாள். கடைசியில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சபதம் போட்டுக் கொள்கிறார்கள்.

மங்கம்மாவைக் கல்யாணம் செய்து, அவளைச் சிறையில் அடைத்து, அவளின் கருவத்தை ஒடுக்குவதாக சுகுணன் சபதம் செய்கிறான். அப்படியே அவனைக் கல்யாணம் செய்து கொண்டு, வாழாவெட்டியானால், அவனை அறியாமல், அவனுக்கே ஒரு பிள்ளையைப் பெற்று அப்பிள்ளையைக் கொண்டே இளவரசனுக்கு சவுக்கடி கொடுப்பதாகப் பதிலுக்கு மங்கம்மா சபதம் செய்கிறாள்.

அரசன் வெங்கடாசலம் வீட்டுக்கு மந்திரியை அனுப்பி மங்கம்மாவை சுகுணனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் படி கேட்கிறான். திருமணமும் நடக்கிறது. திருமணம் முடிந்தவுடன் மங்கம்மா சிறையில் அடைக்கப்படுகிறாள். சிறையில் தன்னைப் பார்க்க வந்த தந்தையிடம் சிறைக்கும், தந்தையின் வீட்டுக்கும் ஒரு சுரங்கம் அமைக்கும் படி கேட்கிறாள். அதன் படி, சுரங்கம் ஒன்று கட்டப்படுகிறது. தந்தையின் உதவியால், கழைக்கூத்தாடி ஒருவனிடம்  ஆடல், பாடல்களைக் கற்றுக் கொள்கிறாள். மங்கம்மா கழைக்கூத்தாடிச்சி வேடம் கொண்டு சுகுணன் முன் நடனமாடுகிறாள். சுகுணன், அவளிடம் மனதைப் பறி கொடுத்து, அன்றைய இரவை அவளுடன் கழிக்கிறாள்.

மங்கம்மாவுக்கு ஒரு பிள்ளை பிறக்கிறான். அவனுக்கு வயது வரும் வரை அவள் காத்திருக்கிறாள். மகனும் (ரஞ்சன்) தந்தையைப் பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறான். அவன் சுகுணனை வஞ்சித்து, அவனை ஒரு சாக்கில் போட்டுக் கட்டி, சபையறியத் தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறான்.

அடுத்த பகுதியில் 1944 ஆம் ஆண்டின் சில படங்களைப்படங்களைப் பற்றி பார்ப்போம். நன்றி! வணக்கம்!.

படங்கள்: 1. காரைக்கால் அம்மையார்அம்மையார். 2. குபேர குசேலா. 3. சிவகவி. 4. மங்கம்மா சபதம் (COURTESY: THE HINDU AND RANDOR GUY)