"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 4
இப்போது நாம் காணவிருப்பது 1941 ல் வெளி வந்த சில படங்கள். இவற்றில் முக்கியமானவை, சபாபதி, அசோக்குமார், கிருஷ்ணகுமார், குமாஸ்தாவின் காதல், வனமோகினி போன்றவை. இவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு தொகுத்தளிக்கிறேன்.
1. அசோக் குமார்.
ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, என். எஸ். கிருஷ்ணன், எம். ஜி. இராமச்சந்திரன், பி. கண்ணாம்பா, டி. ஏ. மதுரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். நியூடோன் ஸ்டுடியோவில் மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் இது தயாரிக்கப்பட்டது.
சாம்ராட் அசொகரைச் சுற்றி எழுதப்பட்ட புத்தக் கதைகளுள் ஒன்றே அசோக் குமாராகும். ஆனால் இக் கதைக்கு வரலாற்றில் எந்த சான்றுகளும் இல்லை. இதன் அடிப்படையிலேயே பின்னாளில் சாரங்கதராவும் தயாரிக்கப்பட்டது.
கதைச்சுருக்கம்.
அசோகரது மன்னன் குணாளன் மீது, அசோகரது இளைய மனைவி திசியரட்சதை காதல் கொள்கிறாள். அதிர்ச்சியடைந்த குனாளன், அவளது காதலை நிராகரிக்கிறான். திசியரட்சதை மன்னரிடம் குணாளன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்று வீண் பழி சுமத்துகிறாள். கோபம் கொண்ட மன்னர், குணாளனது கண்களைக் குருடாக்கி அவனை நாடு கடத்துகிறார். தனது இளம் மனைவி காஞ்சனமாலவுடன் நாட்டை விட்டு வெளியேறி பல இன்னல்களை சந்தித்து, தனது பச்சிளம் குழந்தையையும் இழந்து வாடும் குணாளன் இறுதியில் புத்தபிரானின் அருளால் இழந்த கண்கள் இரண்டையும் பெறுகிறான். அசோகர் உண்மையை அறிந்து மனம் வருந்துகிறார். திசியரட்சதை நஞ்சருந்தி உயிர் துறக்கிறாள்.
குணாளனாக பாகவதரும், காஞ்சனமாலாவாக டி வி குமுதினியும் நடித்துள்ளார்கள். அசோகராக சித்தூர் வி நாகையாவும், அவரது இளம் மனைவியாக பசுபலேட்டி கண்ணாம்பாவும் நடித்துள்ளனர். கண்ணாம்பாவுக்கு தமிழில் இது 2 ஆவது படம், தமிழ் தெரியாத அவர் தெலுங்கில் வசனங்களை எழுதி வைத்து அவற்றை மிகச் சிறப்பாக உச்சரித்து நடித்தார். எம் ஜி ராமச்சந்தர் (எம் ஜி ஆர்)என்ற வளர்ந்து வரும் நடிகர் ஒரு சிறிய துணைப் பாத்திரத்தில் நடித்தார். பின்னாளில் சந்த்ரலேகாவில் நடித்துப் புகழ் பெற்ற ரஞ்சன் புத்த பிட்சு வேடத்தில் தோன்றிய முதல் படம் இது.
இந்தப் படத்தின் சிறப்பம்சம் "உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ" என்ற பாகவதரின் பாடல். இதற்கு கண்ணாம்பா நடமாடினார். நடனம் துளியும் தெரியாத அவர், தகுந்த பயிற்சி எடுத்துக் கொண்டு ஆடி ஒரே இரவில் ஒளிப்பதிவு செய்யப் பட்டது. ஒளிப்பதிவு - மேதை ராம்நாத் அவர்கள்.
இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றியிருந்தார். அவற்றில் பின்வரும் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றிருந்தன:
பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர் (தியாகராஜ பாகவதர்)
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ (ராகம்: பைரவி, தாளம்: ஆதி, தியாகராஜ பாகவதர்)
சத்வகுண போதன் (ராகம்: ஜோன்புரி, தாளம்: ஆதி, தியாகராஜ பாகவதர்)
மனமேநீ ஈசன் நாமத்தை (ராகம்: குந்தவராளி, தாளம்: ஆதி, தியாகராஜ பாகவதர்)
தியானமே எனது மனது நிறைந்தது (ராகம்: காப்பி, தாளம் : ஆதி, தியாகராஜ பாகவதர்)
இக்காலகட்டத்தில் பாகவதர் மிகவும் புகழ் பெற்றிருந்தார். அவரது புகழையே நம்பி எடுத்த படம் இதுவாகும். அவரது அடுத்த படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த காலம் அது. பாகவதர் தான் நினைத்தவற்றை வெகு இலகுவாக அடையக் கூடியவராக இருந்தார். காஸிபூர் ரோஜாவின் பன்னீர்க் குளியல்தான் தினமும் அவர் குளிப்பது. அவ்வளவு ஆடம்பரத்தை அவர் அனுபவித்து வந்தார். பின்னாளில் அவர் வறுமையில் வாடினார். அவரது வாழ்க்கை மற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு ஒரு பாடம் ஆகும்.
(1940 தொடரும். PHOTO COURTESY - THE HINDU AND RANDOR GUY)

No comments:
Post a Comment