Saturday, 20 August 2016

"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 7"

1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு :

அக்ஷயம், அருந்ததி,, அசட்டுப்பிள்ளை, உத்தமி, காரைக்கால் அம்மையார், குபேர குசேலா, சிவகவி, ஜோதிமலர், திவான் பகதூர், தேவகன்யா, மங்கம்மா சபதம். இவற்றில் குறிப்பிடத் தக்கவை, காரைக்கால் அம்மையார், குபேர குசேலா, சிவகவி, மங்கம்மா சபதம் போன்றவை.

1. காரைக்கால் அம்மையார்:

காரைக்கால் அம்மையார் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, கே. சாரங்கபாணி, டி எஸ் துரைராஜ், ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் சிறப்பு பாடல்கள், புகழ் பெற்ற நடராஜ் - சகுந்தலா தம்பதியினரின் சிவ பார்வதி நடனம் ஆகியவை.

2. குபேர குசேலா: குசேலரின் கதையை சிறிது மாற்றி நகைச்சுவையாக குசேலரே குபேரன் ஆவது போல் அமைக்கப் பட்ட திரைக்கதையில் உருவான படம். இதில் மூன்று குபேரர்கள். உண்மையான குபேரன் (D பாலசுப்ரமணியம்), பேராசையால் குபேராராக மாறும் குசேலர் (பி யு சின்னப்பா), குபேராராக மாறும் ஒரு பூதம்பூதம் (மீண்டும் சின்னப்பா). குசேலராக பாபநாசம் சிவன் நடித்திருந்தார். அவர் தனது சொந்தக் குரலில்"கண்ணா கண்ணா கண்ணா கருணை செய் கமலக் கண்ணா" என்ற பாடலைப் பாடி நடித்திருந்தார். ஆனால் துரதிஷ்ட வசமாக, இந்தப் பாடல் இசைத்தட்டில் பதிவேற்றப்படவில்லை.

இதைத் தவிர பி யு சின்னப்பா பாடியபாடிய "நடையலங்காரம்கண்டேன்"  "மாலை சூட  வந்தேன் மல்லிகா" போன்ற பாடல்களும், டி ஆர்ஆர் ராஜகுமாரி பாடிய "என்னை விட்டு எங்கே சென்றீர்" பாடலும் பிரபலம். பாடல்களை பாபநாசம் சிவனும் உடுமலை நாராயண கவியும் இயற்ற, குன்னக்குடி வெங்கட்ராம அய்யர் இசையமைத்திருந்தார். நடனம் வழுவூர் ராமைய்யா பிள்ளை, ஒளிப்பதிவு மார்க்கஸ் பாட்லே. என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம், டி எஸ் துரைராஜ் ஆகியோர் நகைச்சுவை பாத்திரங்கள் ஏற்றிருந்தனர்.

3. சிவகவி: சிவகவி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடுவின் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. சிவபக்தியை, சிவசோதனையை மாயாஜாலக் காட்சிகளின் மூலம் சொல்லும் இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன், டி. பாலசுப்பிரமணியம், டி. ஆர். ராஜகுமாரி, டி. ஏ. மதுரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பக்ஷிராஜா பிலிம்ஸாரால் தயாரிக்கப்பட்டது. ராமையா பிள்ளை இத்திரைப்படத்தின் நடனங்களை அமைத்திருந்தார்.

இப்படத்தில் மொத்தம் 29 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன் அனைத்துப் பாடல்களையும் இயற்றியிருக்கிறார். அவற்றில் பின்வரும் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றிருந்தன:

வதனமே சந்த்ர பிம்பமோ (ராகம்: சிந்து பைரவி, தாளம்: திஸ்ரம், பாகவதர்)
அம்பா மனங்கனிந்துனது கடைக்கண்டார் (ராகம்: பந்துவராளி, தாளம்: ஆதி, பாகவதர்)
வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ (ராகம்: செஞ்சுருட்டி, தாளம்: ஆதி, பாகவதர்)
ஸ்வப்பன வாழ்வில் மகிழ்ந்து (பாகவதர்)

படத்தின் நீளத்தினால் சற்று தொய்வு ஏற்பட்டாலும், பாடல்களுக்காகவே ஓடிய படம் இது.

மங்கம்மா சபதம் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆசார்யாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், வசுந்தரா, என். எஸ். கிருஷ்ணன் ஆகியோர்  நடித்திருந்தனர். ரஞ்சன் தந்தை, மகன் என இரு வேடங்களில் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோரின் பாடல்களுக்கு எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஷ்வரராவ் ஆகியோர் இசையமைத்தனர். மங்கம்மா சபதம் திரைப்படம் அக்காலத்தில் 4 மில்லியன் ரூபாய்களை நிகர லாபமாகப் பெற்று பெரும் வெற்றி பெற்றது.

கதைச் சுருக்கம்: கலிங்க நாட்டில் வெங்கடாசலம என்பவருக்கு பிறந்தவள் மங்கம்மா (வசுந்தரா). நல்ல அழகி. ஒரு நாள் மாடப்புறா ஒன்றைத் துரத்திக் கொண்டு அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழைகிறாள் மங்கம்மா. அங்கு இளவரசன் சுகுணன் (ரஞ்சன்) அவளை அணுகிப் பலாத்காரம் செய்ய முயலுகிறான். மங்கம்மா அவனிடம் இருந்து தப்பித்து வெளியேறுகிறாள். மங்கம்மாவின் மீது மோகம் கொண்ட சுகுணன் அடப்பங்காரனின் (பி. அப்பணய்யங்கார்) உதவியுடன், மங்கம்மாவின் இருப்பிடத்தை அறிந்து, அங்கு சென்று அவளிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்கிறான். புத்திசாலியான மங்கம்மா அவனைக் கீழே தள்ளி விடுகிறாள். கடைசியில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சபதம் போட்டுக் கொள்கிறார்கள்.

மங்கம்மாவைக் கல்யாணம் செய்து, அவளைச் சிறையில் அடைத்து, அவளின் கருவத்தை ஒடுக்குவதாக சுகுணன் சபதம் செய்கிறான். அப்படியே அவனைக் கல்யாணம் செய்து கொண்டு, வாழாவெட்டியானால், அவனை அறியாமல், அவனுக்கே ஒரு பிள்ளையைப் பெற்று அப்பிள்ளையைக் கொண்டே இளவரசனுக்கு சவுக்கடி கொடுப்பதாகப் பதிலுக்கு மங்கம்மா சபதம் செய்கிறாள்.

அரசன் வெங்கடாசலம் வீட்டுக்கு மந்திரியை அனுப்பி மங்கம்மாவை சுகுணனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் படி கேட்கிறான். திருமணமும் நடக்கிறது. திருமணம் முடிந்தவுடன் மங்கம்மா சிறையில் அடைக்கப்படுகிறாள். சிறையில் தன்னைப் பார்க்க வந்த தந்தையிடம் சிறைக்கும், தந்தையின் வீட்டுக்கும் ஒரு சுரங்கம் அமைக்கும் படி கேட்கிறாள். அதன் படி, சுரங்கம் ஒன்று கட்டப்படுகிறது. தந்தையின் உதவியால், கழைக்கூத்தாடி ஒருவனிடம்  ஆடல், பாடல்களைக் கற்றுக் கொள்கிறாள். மங்கம்மா கழைக்கூத்தாடிச்சி வேடம் கொண்டு சுகுணன் முன் நடனமாடுகிறாள். சுகுணன், அவளிடம் மனதைப் பறி கொடுத்து, அன்றைய இரவை அவளுடன் கழிக்கிறாள்.

மங்கம்மாவுக்கு ஒரு பிள்ளை பிறக்கிறான். அவனுக்கு வயது வரும் வரை அவள் காத்திருக்கிறாள். மகனும் (ரஞ்சன்) தந்தையைப் பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறான். அவன் சுகுணனை வஞ்சித்து, அவனை ஒரு சாக்கில் போட்டுக் கட்டி, சபையறியத் தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறான்.

அடுத்த பகுதியில் 1944 ஆம் ஆண்டின் சில படங்களைப்படங்களைப் பற்றி பார்ப்போம். நன்றி! வணக்கம்!.

படங்கள்: 1. காரைக்கால் அம்மையார்அம்மையார். 2. குபேர குசேலா. 3. சிவகவி. 4. மங்கம்மா சபதம் (COURTESY: THE HINDU AND RANDOR GUY)

No comments:

Post a Comment