Friday, 26 August 2016

"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 12"

1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்:

அபூர்வ சகோதரர்கள், இன்பவல்லி, கனகாங்கி, கன்னியின் காதலி, கீதா காந்தி, தேவ மனோகரி, நம் நாடு, நல்ல தம்பி, நவஜீவன், கிருஷ்ணன் பக்தி, நாட்டிய ராணி, பவளக்கொடி, மங்கையர்க்கரசி, மாயாவதி, ரத்னகுமார், வாழ்க்கை, வினோதினி, வேலைக்காரி போன்றவை.

இவற்றில் சில படங்களைப் பற்றி இங்கு காண்போம்.

1. அபூர்வ சகோதரர்கள்: ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரிப்பான இப்படம், அலெக்ஸாண்டர் டூமாஸின் புகழ்பெற்ற நாவலான “The Corsican Brothers” ஐத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் வரும் இரட்டையர்கள் வேடத்திற்கு சந்திரலேகா படத்தில் நடித்துப் புகழ் பெற்றிருந்த எம் கே ராதாவும், கதாநாயகியாக பி பானுமதியும் தேர்வு செய்யப் பட்டனர். வழக்கறிஞராக இருந்து இயக்குனரான டி ஜி ராகவாச்சாரி என்னும் ஆச்சார்யா இதன் இயக்குனராக நியமிக்கப் பட்டார். இதில் வரும் வில்லன் மாரப்ப பூபதி வேடத்திற்கு திரு பி யு சின்னப்பாவை அணுகினர். ஆனால் அவர் தனது கதாநாயக உருவகம் பாதிக்கப்படும் என்று மறுத்து விட்டார். ரஞ்சனை போடலாம் என்று நினைத்தார்கள், அதுவும் சரிப்பட்டு வரவில்லை. வேறு எவரும் சரியான ஆள் கிடைக்கவில்லை. அப்போது திரு வாசனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

கன்னடத்தில் புகழ் பெற்றிருந்த, நாடக நடிகரும், திரைப்பட நடிகருமான ஆர் நாகேந்திர ராவ் அப்போது ஒரு படத் தயாரிப்பு விஷயமாக வாசனை சந்திக்க வந்திருந்தார். அவரைப் போடலாம் என்று வாசன் கூறினார். ஆனால் அவரது தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சரியாக இல்லை. ஆனாலும் அவர் தனது அனுபவத்தினால் தனது குறைகள் தெரியாமல் சிறப்பாக நடித்தார்.

படத்தின் பாடல்கள் சிறப்பாக இருந்தன (இசை - எஸ் ராஜேஸ்வரராவ், எம் டி பார்த்தசாரதி, ரீமா). லட்டு லட்டு என்று ஒரு பாடல், பானுமதி வில்லனிடம் இருந்து தப்பிக்க பாடுவது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளின் வரிகளில் அமைந்திருந்தது. (பாடல், கொத்தமங்கலம் சுப்பு, வ. சீதாராமன்). பி பானுமதி இந்தப பாடலுக்கு திறமையாக பாடி ஆடி பெயர் பெற்றார். இந்தப் படத்தின் மூலம் அவர் திரைவானில் பெரும் உயரத்தை எட்டினார்.

இதன் இந்தி வடிவமான நிஷான் படத்திற்கு ராஜேஸ்வரராவ் பியானோவில் வாசித்துக் காண்பித்த ஒரு மெட்டு வாசன் அவர்களை மிகவும் கவர்ந்து விட்டது. தமிழிலும் இந்த மெட்டில் ஒரு பாடல் வர வேண்டும் என்று அவர் விரும்பினார். படப் பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்தப் பாடல் படத்தில் சேர்க்கப் பட்டது, அதுதான் "மானும் மயிலும் ஆடும் சோலை" என்ற பாடல். இதன் பியானோ இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதன் இந்தி வடிவத்தில் ரஞ்சன், பானுமதி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதுமன்றி விமரிசர்களிடையும் நல்ல பெயரைப் பெற்றது.ஜெமினி நிறுவனத்திற்கு இது ஒரு பெரும் வெற்றிப் படமாகும்.

2. கன்னியின் காதலி: 1949 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், கே. ஆர். ராம்சிங், அஞ்சலிதேவிமற்றும் பலரும் நடித்துள்ளனர். மாதுரி தேவி இதில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  ஆங்கில நாடகாசிரியரான ஷேக்ஸ்பியரின் பிரபல நகைச்சுவை நாடகமானபன்னிரண்டாவது இரவு என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது இத்திரைப்படம். என். டி. சுந்தரத்தின் வசனத்திலும் வேதாந்தம் ராகவய்யாவின் நடனப்பயிற்சியிலும் உருவான இத்திரைப்படம் சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. கண்ணதாசனின் பாடல்களுக்கு எம். எல். வசந்தகுமாரி  பின்னணிக்குரல் கொடுத்திருக்கிறார்.

ஒரே சாயலுள்ள அண்ணன் ஆதித்தனும் தங்கை சந்திரிகாவும் விதிவசத்தால் பிரிக்கப்பட்டு வேறு வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். (அண்ணனாகவும் தங்கையாகவும் மாதுரி தேவிநடிக்கிறார்). தனது பெண்மையைக் காத்துக் கொள்ளும் பொருட்டு ஆண்வேடம் தாங்கி கலைமணி என்ற பெயர் பூண்ட சந்திரிகா, வசந்தபுரி மன்னனின் (எஸ்.ஏ.நடராஜன்) ஆஸ்தான கவியாக அமர்ந்து அவனது காதலியான மேகலையிடம் (அஞ்சலிதேவி) காதல் தூது செல்கிறாள். கலைமணியை உண்மை வாலிபன் என எண்ணிய மேகலை தன் உள்ளத்தைப் பறி கொடுக்கிறாள். சமயத்தில் ஆதித்தனும் அங்கு வருகிறான். உடன்பிறந்தவர்களின் தோற்றப் பொருத்தத்தால் தோன்றிய குழப்பங்கள் தீர்ந்து மேகலையை ஆதித்தனும், வசந்த குமாரனைச் சந்திரிகாவும் மணக்கின்றனர். கதையும் சுபமாக முடிகிறது.

பாடல்கள்: கலங்காதிருமனமே... (திரு.கண்ணதாசனின் முதல் பாடல்)
காரணம் தெரியாமல்... (பாடல்: கண்ணதாசன்)
புவி ராஜா (பாடல்: கண்ணதாசன்)

(இதன் தொடர்ச்சியை அடுத்த பகுதியில் காண்போம்)

புகைப் படங்கள்: 1. அபூர்வ சகோதரர்கள். 2. கன்னியின் காதலி. (COURTESY : THE HINDU, AND RANDOR GUY)

No comments:

Post a Comment