Thursday, 4 August 2016

"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" – 3

1940

"உத்தமபுத்திரன்"
1939ல் வந்த ஹாலிவுட்டின் மிகப் பெரிய வெற்றிப் படமான "The Man in the Iron Mask" என்ற "Alexandre Dumas" எழுதிய ஃ பிரெஞ்ச் நாவலைத் தழுவி எடுக்கப் பட்ட படம் தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸாரால் எடுக்கப் பட்ட படம்.இதன் சிறப்பம்சம் தமிழில் வெளி வந்த முதல் இரட்டை வேடப் படம்.

இதன் நாயகர் பி யு சின்னப்பா. 1936ல் சந்திரகாந்தா என்ற படத்தில் ஒரு துணை வேடத்தில் அறிமுகமாகி பின்னர் 1938ல் யயாதி என்ற படத்தில் காதானாயகனாக நடித்தார்.  இவரது திரை வாழ்க்கை அத்துடன் ஒரு தற்காலிக நிறுத்தத்திற்கு வந்தததனால் விரக்தியடைந்த அவர், ஆன்மீகத்தைத் தழுவி, உண்ணாவிரதங்களும், மவுன விரதங்களும் கடைப் பிடித்து வந்தார், இந்நிலையில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரு டி ஆர் சுந்தரம் அவரை சந்தித்து தனது உத்தமபுத்திரனில் நடிக்க வைத்தார்.  நடிப்பைதைத் தவிர சின்னப்பா, மல்யுத்தம், குஸ்தி, சிலம்பம் ஆகியவற்றிலும் சிறந்தவராக இருந்ததால், இப்படத்தில் அவர் அனைத்து சண்டைக் காட்சிகளிலும், (கத்தி சண்டையும் கூட) தானே நடித்தார்.

பிரிட்டிஷ் அ ரசாங்கம் பாரதியாரின் பாடல்களை தடை செய்திருந்த போதிலும், சுந்தரம் துணிந்து "செந்தமிழ் நாடென்னும்போதினிலே" என்ற பாடலை  இப்படத்தில் இடம் பெறச்  செய்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவனத்திலிருந்து இது தப்பியது.  இப்பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

இது மட்டுமன்றி, தமிழ் சினிமாவில் இது வரை இடம் பெற்றிராத, இரட்டையர்கள் நேருக்கு நேர் தோன்றி சண்டையிடும் காட்சியும் இடம் பெற்றது.

எம் வி ராஜம்மா இதில் கதாநாயகியாகத் தோன்றினார். இவர் ஏற்கெனவே யயாதியில் பி யு சின்னப்பாவுடன் நடித்தார். பின்னர் இவர் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் குணச்சித்திர வேடங்களிலும் அன்னை வேடங்களிலும் நடித்தார்.

டி எஸ் பாலையா இதில் வில்லனாகத் தோன்றி தனது தனிப்பட்ட நடிப்பால் ஒரு இடத்தைப் பெற்றார். வழக்கம் போல என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம், காளி  என் ரத்தினம், பி ஏ பெரியநாயகி என்று ஒரு நகைச்சுவைப் பட்டாளமே இதில் இருந்தது.

இப்படம் பி யு சின்னப்பா அவர்களின் மகுடத்தில் ஒரு வைரம் என்றால் அது மிகையாகாது.

இந்த வருடம் வெளி வந்த மற்றுமொரு குறிப்பிடத்தக்கப் படம் சகுந்தலை". எல்லிஸ் டங்கனின் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் மகாகவி காளிதாசரின் சாகுந்தலம் என்ற காவியத்தை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது. சகுந்தலையாக எம். எஸ். சுப்புலட்சுமி, துஷ்யந்தனாக ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகியோர்  நடித்துள்ளனர். என் எஸ் கிருஷ்ணன், டி எஸ் துரைராஜ் ஆகியோரது நகைச்சுவைக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. சென்னை நியூடோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது.

இப்படத்தில் மொத்தம் 24 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் சில:

எங்கும் நிறை நாத ப்ரும்மம் (மேரே கிரிதர மெட்டு, எம். எஸ். சுப்புலட்சுமி)
மனமோகனாங்க அணங்கே (எம். எஸ். சுப்புலட்சுமி. ஜி. என். பாலசுப்பிரமணியம்)
பிரேமையில் யாவும் மறந்தேனே (எம். எஸ். சுப்புலட்சுமி. ஜி. என். பாலசுப்பிரமணியம்)
வெகுதூரங் கடல் தாண்டி போவோமே மீன் பிடிப்போமே (என்.எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ்)
இன்னிக்கு காலையிலே எழுந்திருச்சு கஞ்சிதண்ணி இல்லாமலே கஷ்டப்படுகிறேன் கடவுளே (என்.எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ்)

மீண்டும் சந்திப்போம்.

படங்கள்: 1. உத்தமபுத்திரன். 2. சகுந்தலை ( COURTESY. THE HINDU AND RANDOR GUY)


No comments:

Post a Comment